2024 சென்னைப் புத்தகக் காட்சிக்கு இன்று தான் முதல் முறையாக செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சென்ற முதல் நாளே வித்தியாசமான ஒரு புத்தகம் கண்களில் பட்டது.
The Complete Letter Writer என்ற இந்த புத்தகத்தினை நியூயார்க் பதிப்பகமான Pocket Books வெளியிட்டுள்ளது. 1968ல் வெளியான இந்த புத்தகம் ஏதோ பழையப் புத்தகக் கடையில் வாங்கினேன் என நினைத்துவிடாதீர்கள். அரங்கு எண் 79, International Book Agencyல் தான் கிடைத்தது. விலை ரூ.10, பக்கங்கள் 310.
Postcrossingல் ஆர்வம் கொண்ட எங்களுக்கு இது போன்ற புத்தகங்கள் ஆர்வம் ஊட்டுபவை. கண்ணில் பட்ட மூன்று புத்தகங்களையும் வாங்கிவிட்டேன். ஒன்று எனக்கு, மற்ற இரண்டும் எனக்கு வானொலிப் புத்தகங்களை யார் முதலில் பரிசளிக்கிறார்களோ, அவர்களுக்கு! இன்னும் நிறைய அட்டைப் பெட்டிகள் வைத்திருக்கிறார்கள். தேடுபவர்களுக்கு அவர்களுக்கான பொக்கிஷம் கிடைக்கக் கூடும்.
கடிதம் எழுதுவது தொடர்பாக மற்றும் ஒரு சிறிய புத்தகத்தினை LIFCO வெளியிட்டுள்ளது. A Handy Letter - Writer எனும் அந்த புத்தகத்தின் விலை ரூ.15 மட்டுமே. கடிதப் பிரியர்கள் வாங்கி அன்பளிப்பாக கொடுக்கலாம்.
எனக்கு சிறிய, குட்டிப்புத்தகங்கள் மேல் என்றுமே ஒரு ஈர்ப்பு உண்டு. எனது சேகரிப்பில் 2 செ.மீ மட்டுமே கொண்ட புத்தகங்கள் பல உண்டு. இன்று, இதே International Book Agency கடையில் 3 செ.மீ கொண்டதும் 640 பக்கங்களைக் கொண்டதுமான Liliput புத்தகமும் கிடைத்தது. விடுவேனா?!
இணையத்தில் $3 டாலர் புத்தகம் இங்கு ரூ.50க்கு கிடைத்தது. இன்னும் நிறைய லில்லிபுட் புத்தகங்களை சரம் சரமாகத் தொங்கவிட்டுள்ளனர். சேகரிப்பாளர்கள் உடனடியாகச் சென்று தட்டிச்செல்லுங்கள். Langenscheidt's LILLIPUT Dictionary (German - English) எனும் இந்தப் புத்தகம் ஜெர்மனியில் அச்சிடப்பட்டுள்ளது என்பது இங்கு கூடுதல் தகவல்.
இதே International Book Agencyல் இன்னும் ஒரு ஆர்வத்தினைத் தூண்டும் புத்தகத்தினைப் பார்த்தேன். Coffee Table புத்தகமான ERTE வடிவமைப்பாளர்களுக்கும், ஜூவல்லரி டிசைனர்களுக்கும் பிடிக்கும் புத்தகம். விலையும் குறைவு, வாங்க ஆசை, தூக்கிவர முடியாத எடை. தொட்டுத்தொட்டுப் பார்த்துவிட்டு நகர்ந்தேன்.
இன்னும் நிறைய புத்தகங்களைப் பற்றி எழுத இருக்கிறேன். குறிப்பாக முத்து ராசா குமாரின் முதல் நாவலான 'கங்கு', எனது வானொலிக் கட்டுரையுடன் வெளிவந்துள்ள இந்து தமிழ் திசை இயர் புக் என இன்னும் நிறைய எழுத வேண்டும். நாளை தொடர்கிறேன்.